மேகங்களின் ஆன்மாக்கள்
பூமியில் திரியும்
மார்கழி மாதம்
ஊரே குளிரில்
உறைந்து கிடக்க,,,,
நான் மட்டும் உன்
இமைகளின் நிழளில்
குளிர் காய்ந்து கொண்டேன்
உன் குரல் நான்
கேட்டதில்லை
தெளிந்த தேன் துளி
கலந்த பூக்களாய்…
மெலிந்ததொரு மௌனம் அதில்
கலந்திருக்கக் கூடும்
உன் புன்னகை அதைப்
பார்த்ததில்லை
நீ சிரிக்கும் நேரங்களில்
வானில் புதிய நட்சத்திரங்கள்
உருவாகியிருக்கலாம்
உன் கையெழுத்து என்
கண்களுக்கு எட்டவில்லை.
நீ எழுதுவதால்
எழுத்துக்களுக்கு மத்தியில்
பொறாமை வளர்ந்திருக்கும்
உன் உறக்கம் நான்
கண்டதில்லை
உன் அருகில் இருக்கும்
காற்றின் துகள்கள்
சின்னச் சின்ன தேவதைகளாய்
உன்னை ரசித்து இருக்கலாம்
இப்பொழுதெல்லாம்
நான் நடக்கிறேன்
கண்ணாடியில்
முகம் பார்க்கையில்
எப்பொழுதும் நான்
ஒரே மாதிரியாக
இருப்பதாக நம்புகிறேன்
தனிமையில்
மௌனம் கொள்கிறேன்
யார் வந்தாலும்
பேசி விடுகிறேன்
இந்த மாற்றங்களை
ஏற்படுத்தியது
அன்று
நான் பார்த்துத்
தவித்த ஒப்பனையற்ற
உன் முகம்
அருண்தேவன்...
No comments:
Post a Comment